நெடுவினா
1. மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
வளரும் விழி வண்ணமே – வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளந்தென்றலே – வளர்
பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே
– கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை செய்க.
காற்றைப் பாராட்டல் :
மலர்ந்த மலராத பாதி மலரையும், விடிந்தும் விடியாத காலைப் பொழுதையும் விரும்பாதார் எவருமில்லை. அனைவரும் காற்றாகிய உன்னையும் நீ இளந்தென்றலாக வரும் போது விரும்புவர் எனக் குறிப்பிட்டுள்ளார் கண்ணதாசன். காற்றானது நதிகளை வருடியும், செடி கொடிகளை வருடியும் இளந்தென்றலாக வருகிறது. காற்றைப் போலவே தமிழும் அனைவராலும் விரும்பத்தக்கதாய் இருக்கிறது. தெற்கிலுள்ள பொதிகை மலையில் தோன்றிய தமிழுக்கு மதுரையிலே சங்கம் வைத்து அழகிய தமிழ் வளர்த்ததாகவும் கருத்துக் கொள்ளலாம்.
கவி நயம்:
கவிஞர் கண்ணதாசனின் பாடலில் எதுகை, மோனை, இயைபு இயைந்தோடும் வகையிலும் கற்பனை காட்சியளிக்கும் வகையிலும், அணி அழகுற வகையிலும், சந்த தாளமிட்டு சொந்தம் கொண்டாடும் தன் கவி நயத்தைக் காட்சிப்படுத்தியுள்ளார்.
சான்று:
மோனை : வளரும் வண்ணமே
எதுகை : நதியில் பொதிகை
முரண் : மலர்ந்தும் X மலராத
விடிந்தும் x விடியாத
இயைபு : வண்ணமே அன்னமே
அணி : பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே (உவமையணி வந்துள்ளது)
2. காற்று பேசியதைப் போல நிலம், நீர், வானம் பேசுவதாகவும் அவை இன்றைய சுற்றுச்சூழல் பாதுகாப்பினை வலியுறுத்துவதாகவும் ஓர் உரையாடல் அமைக்க.
நிலம் : என் உடலெல்லாம் காய்கிறது. என்னைக் குளிர்விக்கமாட்டாயா வானமே?
வானம் : இதற்கு நான் என்ன செய்ய முடியும்? உன்னில் வாழும் மனிதர்கள் காடுகளை அழித்துக் கொண்டிருக்கிறார்களே! மரங்களை வெட்டுகிறார்களே தவிர, அவற்றை வளர்ப்பதற்குச் சிறிதும் சிந்திக்கிறார்களா என்பது ஐயமே.
நிலம் : ஆம் வானமே! வருடந்தோறும் மரம் நடுவிழாவைக்கூட நட்ட இடத்திலேயே நடத்துகிறார்கள். மரங்களை நட்டு அவற்றைப் பராமரிக்கும் பணியைச் செய்பவர்கள் குறைவே.
வானம் : அதுவும் சரிதான்!
நீர் : நண்பர்களே! என்னை நீங்களும் கண்டுகொள்ள மாட்டீர்களா? இந்த மனிதர்கள்
என்னை எப்படி அழுக்காக்கி உள்ளார்கள் பார்த்தீர்களா?
வானம் : ஐயகோ! உன்னை அடையாளம் காண்பதற்கே சிரமமாக இருக்கிறதே!
நீர் : ஆம் நண்பா !
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்ற உடற்றும் பசி
– என்னும் குறட்பா, வானமே நீ மழை பெய்யாமல் போனால் அடையும் இன்னல்களை அல்லவோ கூறுகிறது.
வானம் : ‘நீரின்றி அமையாது உலகு’ என்றும் திருக்குறள் கூறுகிறது
நிலம் : “மண்தினிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதை வரு வளியும்
வளித்தலை இய தீயுங்
தீமுரணிய நீரும், என்றாங்
கைம்பெரும் பூதத்தியற்கைப் போலப்” என்று நம்மைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார் சங்க இலக்கிய நூலான புறநானூற்றில்.
வானம் : “உலகமாவது நிலம் தீ நீர் விசும்பொடு வளி ஐந்தும் கலந்த மயக்கம்” என்கிறார் தொல்காப்பியர்.
நீர் : “இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு” என்று நாட்டிற்குத் தேவையான உறுப்புகளில் என்னையும் சேர்த்தே கூறியுள்ளார் திருவள்ளுவர்.
நிலம் : சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக 1986-ல் இயற்றப்பட்டுள்ள சட்டம் இந்திய அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நீர் : ஆம் நண்பா! இயற்கை சார்ந்த அனைத்தும் குறிப்பாக நீ, நான், காற்று ஆகிய காரணிகளுடன் தொடர்புடைய அனைத்துக்கும் இச்சட்டம் பொருந்தும்.
வானம் : மிக்க மகிழ்ச்சி! மனிதர்கள் தங்கள் நடவடிக்கையில் மாற்றத்தைக் கொண்டு வருவார்கள் என்று நம்புவோமா!
நிலம், நீர் : உறுதியாக நண்பா !
முல்லைப்பாட்டு
1. முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்தியை விவரித்து எழுதுக.
மழை:
மேகம் அகன்ற உலகத்தை வளைத்துப் பெருமழை பொழிகிறது. மாவலி மன்னன் திருமாலுக்கு நீர்வார்த்துத் தரும்பொழுது மண்ணுக்கும், விண்ணுக்கும் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழைமேகம். அம்மழை மேகம் ஒலிக்கும் கடலின் குளிர்நீரைப் பருகிப் பெருந்தோற்றம் கொண்டு வலமாய் எழுகிறது. மலையைச் சூழந்து விரைந்து வேகத்துடன் பெரு மழையைப் பொழிகிறது.
தெய்வ வழிபாடு:
முதுபெண்கள் காவலையுடைய ஊர்ப்பக்கம் சென்றனர். யாழிசை போன்று ஒலிக்கும் வண்டுகள் நறுமணம் கொண்ட பூக்களைச் சுற்றி ஆரவாரிக்கும். மலர்ந்த முல்லைப் பூவோடு நெல்லையும் சேர்த்து தெய்வத்தின் முன் தூவி வழிபடுவர். தெய்வத்தைத் தொழுது தலைவிக்காக நற்சொல் கேட்டு நிற்பர்.
கன்றின் வருத்தம்:
சிறு தாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக் கொண்டிருந்தது. அதன் வருத்தத்தை ஓர் இடைமகள் கண்டாள்.
வருந்தாதே :
புல்லை மேய்ந்த உன் தாய்மாரை வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்ட என் இடையர் இப்பொழுது ஓட்டி வந்து விடுவார் வருந்தாதே’ என்றாள் இடைமகள்.
முதுபெண்டிர் தலைவியிடம் கூறியது :
இடைமகள் மூலம் நற்சொல்லைக் கேட்டோம். நின் தலைவன் பகைவரை வென்று திறைப் பொருளோடு வருவது உறுதி. மனத்தடுமாற்றம் கொள்ளாதே!
புயலிலே ஒரு தோணி
1. புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில் தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?
முன்னுரை:
மனித வாழ்க்கை போல இயற்கையும் இன்பம் துன்பம் நிறைந்தது. அந்த வகையில் ‘புயலிலே ஒரு தோணி’ என்ற புதினத்தில், பா.சிங்காரம் எழுதியுள்ள வருணனை, அடுக்குத்தொடர் மற்றும் ஒலிக்குறிப்பும் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
புயல் வருணனை:
கொளுத்தும் வெயில் இமைக்கும் நேரத்தில் மறைந்துவிட்டது. பாண்டியன் அண்ணாந்து பார்த்தான். மேகங்கள் கும்மிருட்டு ஆனது. காற்றில்லாமல் ஒரே இறுக்கமானது. இடிமுழக்கத்துடன் மின்னல் வானத்தைப் பிளந்தது. வானம் உடைந்தன. வெள்ளம் கொட்டியது. சூறாவளி ஆடிக்குதித்தது.
வானுடன் கடல் கலந்துவிட்டது. மழை தெரியவில்லை. கடல் வெறிக் கூத்தாட்டத்தால் தொங்கான் மூழ்கி சிப்பங்கள் கடலில் நீந்துகின்றன. வானம், கடல், காற்று, மழை ஒன்று சேர்ந்து கூக்குரலிட்டது. வானம் பிளந்து நெருப்பைக் கக்கியது.
அடுக்குத்தொடர்:
தொங்கான் நடுநடுங்கித் தாவிதாவிகுதிகுதித்தது. பிறகு தொங்கான் குதித்து விழுந்து நொறுநொறு என்று நொறுங்கியது. சுழன்று கிறுகிறுத்துக் கூத்தாடியது.
ஒலிக்குறிப்பு:
தொங்கான் தாவி விழுந்தது, சுழல்கின்றது. கடலில் சிலுசிலு மரமரப்பு நொய்ங் புய்வ், நொய்ங், புய்ங் என இடி முழக்கம் செய்ய சீனப் பிசாசுகள் தாவி வீசுகின்றன. பகல் இரவாகி உப்புக் காற்று உடலை வருடியது.
முடிவுரை:
புயலுக்குப் பின்னால் ஐந்தாம் நாள் கரை தென்பட்டது. அடுத்தநாள் முற்பகல் பினாங்கு துறைமுகத்தை அணுகினார்கள். பிலவானிலிருந்து சுமத்ராவரை புயல் இப்படிப் பயமுறுத்தியது. இத்தகைய வருணனையோடு புயலில் தோணிபடும்பாட்டை அழகாய்’ விவரிக்கின்றார் பா. சிங்காரம்.
0 Comments